வதந்திகளை நம்பாதீர்கள்! – சஜித் அணி வேண்டுகோள்.
“அரசுப் பக்கம் தாவி அவர்களின் கால்களை நக்கிப் பிழைப்பு நடத்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் தயார் இல்லை. எதிரணி எம்.பிக்கள் அரசுடன் இணையவுள்ளனர் என்று வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எமக்கு ஆணை வழங்கிய மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அரசில் இருந்து அங்கும் இங்கும் தாவுவதாகப் பேசப்பட்டு வருகின்றது.
2020 ஆம் ஆண்டு இந்த அரசு அமையும் போது அரசில் 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால், 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது 135 நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், கடந்த வரவு – செலவுத் திட்டத்தின் போது அது 123 ஆகவும் குறைந்துள்ளது.
அதாவது இந்த அரசில் இருந்து 34 பேர் எதிர்க்கட்சியில் வந்து அமர்ந்திருக்கின்றார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குகளைப் பெற்றவர்கள் அரசில் ஒரு சிலர் இருக்கிறார்கள். ஆனால் முன்னதாக சென்ற ஐந்தாறு பேர் திரும்பி வந்துள்ளனர்.
இன்று அரசின் பக்கமே பிரச்சினையாக இருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் அல்ல என்பதை நினைவுபடுத்துகின்றோம்” – என்றார்.