பதுளையில் கோர விபத்து; இரண்டு மாணவர்கள் சாவு! (பிந்திய தகவல்)

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு மாணவர்கள் பலியாகியுள்ளனர். அத்துடன் 9 பேர் காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்றும் இன்றும் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த வாகனத் தொடரணியில் கப் ரக வாகனம் ஒன்று பதுளை கழிவுகள் சேகரிக்கப்படும் இடத்துக்கு அருகாமையில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மைதானத்தில் விபத்துக்குள்ளானது.
இதன்போது 11 பேர் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
ஏனைய 9 பேரும் பதுளை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுள் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.