டெல்லியில் கொசுவர்த்தி சுருளால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு !
தலைநகர் டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு குடும்பம் வசித்துள்ளது. இவர்கள் நேற்றிரவு தங்கள் வீட்டில் கொசுவை விரட்டுவதற்காக கொசுவர்த்தி சுருள் பொருத்தி வைத்து பின்னர் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது இரவு நேரத்தில் அந்த கொசுவர்த்தி சுருள் படுக்கை மெத்தையில் விழுந்து தீப்பிடித்துள்ளது.
அத்துடன் அந்த தீ மூலம் கொசுவர்த்தியில் இருந்து கார்பன் மோனாக்ஸைடு நச்சு புகை வெளியேறியுள்ளது. இதை அவர்கள் தூக்கத்தில் இரவு முழுவதும் சுவாசித்துள்ளனர். இதன் காரணமாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மயக்க நிலை அடைந்து, அதில் 6 பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் மயக்கிய நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த தீப்புகையை பார்த்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.
6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 6 பேரில் 4 பேர் ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தையும் அடக்கம். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.