போபால்-டெல்லி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
நாட்டின் அதிவேக ரயில் சேவைக்காக வந்தே பாரத் ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரயில்களின் சேவை வழித்தட எண்ணிக்கையை ரயில்வே அமைச்சகம் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய பிரதேசம் வருகை தந்த பிரதமர் மோடியை மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் விமான நிலையத்தில் வரவேற்றார்.
பின்னர், அங்கிருந்து போபாலில் உள்ள குஷபவ் தாக்கரே அரங்கில் நடைபெற்ற ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகளின் உச்சிமாநாடு 2023 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். இதில் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி புதிய வந்தே பாரத் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். போபாலில் இருந்து புதுடெல்லி வரை செல்லும் இந்த ரயில் சுமார் 700 கிமீ தூரத்தை 7.30 நேரத்தில் கடக்கும்.
சனிகிழமையை தவிர வாரத்தின் மற்ற ஆறு நாள்களிலும் இந்த வந்தே பாரத் ரயில் இயங்கும். போபாலில் இருந்து டெல்லி செல்ல ஏசி சேர் வகுப்பில் ஒரு நபருக்கு ரூ.1,735 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏக்சிக்யூடிவ் சேர் கார் கட்டணம் ரூ.3,185 ஆகும்.
இம்மாதத்திலேயே மேலும் நான்கு புதிய வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்படவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சென்னை- கோவை, டெல்லி-ஜெய்ப்பூர், செகந்தராபாத் – திருப்பதி, பாட்னா- ராஞ்சி ஆகிய ரயில் தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்கள் இயங்கவுள்ளன.