நான் இருப்பது சரியானதைச் செய்யவே தவிர, பிரபலமானதை செய்ய அல்ல! – ரணில்
தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தாம் சரியானதைச் செய்வதற்குத் தான் இருக்கின்றேன் என்றும், பிரபல்யமானதைச் செய்வதற்கில்லை என்றும் தெரிவித்த ஜனாதிபதி, பிரபலமான கருத்துக்களை முன்வைப்பதன் மூலமே நாடு அழிந்தது எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (01) அனுராதபுரம் விமானப்படை தளத்தில் ஆயுதப்படை, பொலிஸ் மற்றும் ஏனைய அணிகளின் தலைமை தளபதியாக கலந்து கொண்டு விசேட உரையொன்றை விடுத்தார்.
சுதந்திரமான கருத்துக்களை வெளியிடவோ அல்லது விமர்சிக்கவோ எந்தவொரு தரப்பினருக்கும் உரிமை உள்ள நிலையில் வீதியில் கலவரம் செய்வதற்கு எவருக்கும் உரிமையில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
அனைவரும் சரியானதைச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும், நாட்டுக்காகச் சரியானதைச் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பலம் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை முதலில் நாடாளுமன்றத்தில் முன்வைத்தேன் என்றார்.
அதனை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்ட ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, புதிதாகச் சிந்தித்துப் புதிய பயணத்தை மேற்கொண்டால் 25 ஆண்டுகளுக்குள் நாட்டில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். .
பயங்கரவாதப் போரை வென்றது போல் இலங்கையின் பொருளாதாரப் போரும் வெற்றி பெற்று பொருளாதார சுதந்திரத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதற்கு ஆயுதப்படை மற்றும் பொலிஸாரின் பங்களிப்பு தொடர்ந்தும் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக கடந்த வருடம் ஆயுதப்படையினரும் பொலிஸாரும் செயற்பட்ட விதம் குறித்து பாராட்டவும் செய்தார்.
அவர்கள் தமது பொறுப்பை நிறைவேற்றாமல் இருந்திருந்தால் இந்நேரம் இலங்கை அராஜக நாடாக மாறியிருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உலக வல்லரசுகளுக்கிடையிலான தற்போதைய போட்டி இந்து சமுத்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், அதிலிருந்து இலங்கையை விடுவிக்க ஜனாதிபதியாக தாம் செயற்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த கால இராணுவ நிலைமைகளைப் போல் அல்லாமல், தொழில்நுட்பம் மற்றும் அறிவாற்றலில் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்கால இராணுவ நிலைமைகளை உருவாக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவாற்றல் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நமது பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்துவதன் மூலம் தற்காப்பு 2030 திட்டத்தைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு ஆயுதப் படைகளின் ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க, செயலாளர் நாயகம் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி வைஸ் எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் சி. டி.விக்ரமரத்ன மற்றும் 1200 முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஏனைய தரங்களைச் சேர்ந்த 1200 பேர்வரை கலந்துகொண்டனர்.