தசரா : சினிமா விமர்சனம்

நிலக்கரி சுரங்கம் அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் நானி நண்பர்களுடன் சதா குடி கும்மாளம் என்று இருக்கிறார். குடித்தால் மட்டுமே அவருக்கு தைரியம் வருகிறது. நிலக்கரி திருடி வாழ்க்கையை ஓட்டுகிறார்.

அதே ஊரில் வசிக்கும் கீர்த்தி சுரேஷ் மீது சிறுவயதில் இருந்தே அவருக்கு காதல். ஆனால் நானியின் நண்பன் தீக் ஷித் ஷெட்டியை கீர்த்தி சுரேஷ் விரும்புவதால் காதலை மனதுக்குள்ளேயே புதைத்து விடுகிறார்.

நண்பனுக்கும் கீர்த்தி சுரேசுக்கும் திருமணம் நடக்க அந்த பயங்கரமும் நடக்கிறது. ஊருக்குள் நுழையும் சில ரவுடிகள் நானியையும் அவரது நண்பர்களையும் கொலை வெறியோடு துரத்துகின்றனர். இதில் புதுமாப்பிள்ளையான நானியின் நண்பன் கொல்லப்படுகிறார்.

நண்பனை கொன்றவர்களை நானி பழிவாங்க துடிப்பதும் கீர்த்தி சுரேஷ் நிலைமை என்ன ஆனது என்பதும் மீதி கதை.. நானிக்கு அதிரடி கதை. அதில் புகுந்து விளையாடி இருக்கிறார். வளர்ந்த தலைமுடி தாடி, அழுக்கு தேகம், எப்போதும் போதை என்று கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டி இருக்கிறார். நண்பனுக்காக காதலை தியாகம் செய்து தவிக்கும் காட்சியில் படம் பார்ப்பவர்களையும் உருக வைக்கிறார். கிளைமாக்ஸ் சண்டையில் அசுரத்தனம் காட்டி இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் துறு துறு வென வருகிறார். திருமணம் முடிந்த கையோடு கணவனை இழந்து அலறி துடித்து அனுதாபம் அள்ளுகிறார். கட்டாய தாலி கட்டும் நானி மீது வெறுப்பு காட்டுவதும் பிறகு அவர் மீது காதல் துளிர்வதும் கவித்துவம். ஷைன் டாம் சாக்கோ வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். தீக் ஷித் ஷெட்டி, சமுத்திரக்கனி, சாய்குமார், பூர்ணா ஆகியோரும் கதாபாத்திரங்களில் நியாயம் செய்துள்ளனர்.

மது, போதை என்று பெரும்பகுதி காட்சிகள் நகர்வது சலிப்பை தருகிறது. அதிரடி சண்டை படத்தை காதல் கலந்து பிரமாண்ட கமர்ஷியல் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஸ்ரீீகாந்த் ஓடேலா. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை பலம். சத்யன் சூர்யன் கேமரா நிலக்கரி சுரங்க பகுதி மக்களின் வாழ்வியலை கண்முன் நிறுத்துகிறது.

Leave A Reply

Your email address will not be published.