அதிகரிக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி
நாடு முழுவதும் உள்ள தனது செல்வாக்கை சீர்குலைக்க உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பலர் வேலைசெய்து வருவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்திய பிரதேசத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போபாலின் ராணி கமலாபதி ரயில்நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் 11வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தூரில் அண்மையில் கோயில் கிணறு விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார். பின்னர் வந்தே பாரத் ரயிலில் பயணித்த பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மகிழ்ச்சியாக கலந்துரையாடினார்.
இந்த ரயில் டெல்லிக்கும் போபாலுக்கும் இடையிலான பயண நேரத்தைக் குறைக்கும் என்றும் தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல வசதிகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுடனான தனது உரையாடலைப் பற்றிப் பேசிய பிரதமர், குழந்தைகளின் ரயில் மீதான ஆர்வத்தையும் உற்சாக உணர்வையும் குறிப்பிட்டார். “ஒரு வகையில், வந்தே பாரத் இந்தியாவின் உற்சாகம் மற்றும் உற்சாகத்தின் சின்னம். இது நமது திறமைகள், நம்பிக்கை மற்றும் திறன்களை பிரதிபலிக்கிறது”, என்றார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஒற்றைக் குடும்ப அரசியலின் விளைவால் ரயில்வே துறை இழப்பைச் சந்தித்ததாக விமர்சித்தார். மேலும் தனது செல்வாக்கை சீர்குலைக்க உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டினர் சிலர் உதவி புரிந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.எத்தனை வெளிநாட்டினர் உடன் சேர்ந்து சதி செய்தாலும், ஒவ்வொரு இந்தியனும் தனது பாதுகாப்பு கவசம் என பிரதமர் மோடி தெரிவித்தார். பிபிசி ஆவணப்படம், ராகுலின் லண்டன் பேச்சுகளுக்கு பதிலடி தரும் விதமாக பிரதமர் மோடியின் பேச்சு அமைந்துள்ளது.
அதிகரிக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள முப்படையினரும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய முப்படைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற 3 நாட்கள் மாநாடு மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கடந்த 30ம் தேதி தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பாதுகாப்புப் படையினரின் தயார் நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முப்படைகளின் தலைமை தளபதியான அனில் சவ்ஹான் பிரதமருக்கு விளக்கினார். பின்னர் முப்படை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், பேரிடர்களின் போது மனிதாபிமான உதவி செய்த முப்படையினருக்கு பாராட்டுகள் தெரிவித்தார். சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடனான எல்லைப் பிரச்னைகள் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய சூழலில், பாதுகாப்பு தயார் நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.