நாட்டின் வீழ்ச்சிக்குக் கோட்டாவே முழுக் காரணம்! – வீரசேகர குற்றச்சாட்டு.
“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மொட்டு எம்.பிக்கள் பொறுப்பேற்கத் தேவை இல்லை. நாங்கள் கோட்டாபய ராஜபக்சவுக்குச் சரியாகத்தான் யோசனை கூறினோம். அவர்தான் அதை உதறித் தள்ளி தன்னிச்சையாக முடிவெடுத்தார். அவர் எடுத்த முடிவுகள் எல்லாம் பிழையானவை. நாட்டின் வீழ்ச்சிக்குக் கோட்டாவே முழுக் காரணம்.”
இவ்வாறு சீறிப் பாய்ந்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவாகச் செயற்பட்ட முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ரணில் விக்கிரமசிங்க சிறந்த ஜனாதிபதி. அவர் மிகவும் இக்கட்டான நிலையில் நாட்டைப் பாரமேற்றார். சஜித் பிரேமதாஸ, சரத் பொன்சேகா எல்லோரும் நாட்டைப் பாரமேற்பதற்குப் பயந்தார்கள். எப்படி நாட்டைக் கட்டியெழுப்புவது என்று அவர்கள் யோசித்தார்கள்.
ஆனால், ரணில் எதையும் யோசிக்கவில்லை. பிரதமர் பதவியை ஏற்குமாறு கோட்டாபய ராஜபக்ச கேட்டதும் எப்போது பதவியேற்க வேண்டும் என்றே ரணில் கேட்டார்.
ரணிலின் திறமையால் – அனுபவத்தால் கோட்டா அவரைப் பிரதமராக நியமித்தார். பின்னர் கோட்டா விலகியதும் ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்று நாட்டின் நிலைமையை உடன் சரி செய்து விட்டார். இப்போது அவர் சிறந்த தலைவர்.
எமது ஆலோசனைகளைக் கோட்டா ஏற்றிருந்தால் இதே வேலையைக் கோட்டாவும் செய்திருப்பார். நல்ல பெயரைப் பெற்றிருப்பார்.” – என்றார்.