13 பிள்ளைகளை பெற்றெடுத்த பெண்.. கணவருக்கு குடும்ப கட்டுப்பாடு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதி அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன மாதையன். 46 வயதான இவருக்கு சாந்தி என்ற 45 வயது மனைவி உள்ளார். பழங்குடி இனத்தை சேர்ந்த மாதையன் விவசாய கூலித் தொழிலாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 12 குழந்தைகள் உள்ள நிலையில், சாந்தி மீண்டும் கருத்தரித்துள்ளார். சில நாள்களுக்கு முன்னர் வீட்டிலேயே பிரசவம் நிகழ்ந்து 13 ஆவது குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில், தகவல் அறிந்த தன்னார்வளர்களும், மாவட்ட மருத்துவ அலுலர்களும் தாய் சேயை பரிசோதித்து பார்க்க கிராமத்திற்கு வந்துள்ளனர். அப்போது தாய் சாந்திக்கு ரத்த சோகை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 13 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், தம்பதிக்கு உரிய விழிப்புணர்வு வழங்கி குடும்ப கட்டுப்பாடு செய்து வைக்க அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் முயற்சி நடத்தினர்.
சாந்திக்கு ரத்த சோகை பாதிப்பு இருப்பதால் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, கணவர் மாதையனுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், அவர் முதலில் அதற்கு சம்மதிக்கவில்லை.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பான பேச்சுக்கள் எழுந்த போது அவர் மருத்துவ குழு வருவதை அறிந்தாலே வனப்பகுதிகளுக்கு சென்று பதுங்கிக்கொண்டு இருந்தார். இந்நிலையில், இம்முறை மாதையனிடம் விஷயங்களை தெளிவாக மருத்துவர்கள் எடுத்து கூறியுள்ளனர். மனைவி சாந்தி மீண்டும் கர்ப்பமடைந்தால் அது பெரும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும், எனவே குடும்ப கட்டுப்பாடு செய்வது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாதையனுக்கு புரிதல் ஏற்பட்டு குடும்ப கட்டுப்பாடு செய்ய சம்மதம் தெரிவித்தார். அவரை, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு நவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.