6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி.
ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் பிரித்வி ஷா 7 ரன், அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 4 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இருவரது விக்கெட்டுகளையும் முகமது ஷமி வீழ்த்தினார். இதையடுத்து வார்னருடன், சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார்.
இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் 37 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ரீலி ரோசவ் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து அபிஷேக் போரல் சர்ப்ராஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார். இதில் அபிஷேக் போரெல் தனது பங்குக்கு 20 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து அக்சர் படேல் களம் இறங்கினார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சர்ப்ராஸ் கான் 30 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஹக்கிம் கான் 8 ரன்களும், அதிரடியாக ரன் சேர்த்த அக்சர் படேல் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
இந்த ஜோடியில் சஹா 14 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து சுப்மன் கில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யாவும் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்ததாக சாய் சுதர்சனுடன், விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அணியின் ரன் ரேட்டை நிதானமாக உயர்த்தினர். இந்த சூழலில் விஜய் சங்கர் 29 (23) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சாய் சுதர்சனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சாய் சுதர்ஷன் 44 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். தொடர்ந்து இந்த ஜோடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
முடிவில் சாய் சுதர்சன் 62 (48) ரன்களும், டேவிட் மில்லர் 31 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 18.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக நாட்ஜ் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.