விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் – 3 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

அம்பாசமுத்திரம் ஏ எஸ் பி பல் பிடுங்கிய விவகாரத்தில் மூன்று காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஆறு பேரைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சரக காவல்துறை துணைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் குற்றச் செயல்கள் புரிந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சேரன்மகாதேவி சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பத்திற்கு மேற்பட்ட நபர்கள் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்துள்ளார்கள். இந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் பெருமாள், சந்திர மோகன், ராஜகுமாரி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று பணியிடம் வழங்கப்படவில்லை.

இதே போல காவல் உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன், சந்தனகுமார் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவுகளை நெல்லை சிறப்பு காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் காரணமாக தொடர்ந்து காவல்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மேலும் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.