இலங்கைக்கு உதவ வேண்டும் இந்தியா! – ரணில் கோரிக்கை.
இலங்கையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று ‘த இந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் பாரத் லால் தலைமையிலான இந்திய தூதுக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
இந்தக் குழுவினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக பாரத் லால் அறிக்கையொன்றை விடுத்துள்ளார் என்று ‘த இந்து’ தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கை தொடர்பான தனது தொலைநோக்குப் பார்வை குறித்தும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியத் தூதுக்குழுவிடம் தௌிவுபடுத்தியுள்ளார்.
கொள்கை சீர்த்திருத்தங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு, திறன் வளர்ப்பு, நல்லாட்சி, துறைசார் வல்லுநர்களை உருவாக்குவதற்கான அமைப்புகளை ஏற்படுத்துதல், பொதுமக்களுக்குத் திட்டமிட்ட கால வரையறைக்குள் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை மையப்படுத்தி ஜனாதிபதியின் கருத்துக்கள் அமைந்திருந்தன என்று இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரங்களில் இந்தியா, இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும், பொதுக் கொள்கைக்காக இலங்கையில் பல்கலைக்கழகம் அமைக்க உதவ வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார் என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.