பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீர் கலப்பு- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று, தியாகராய நகர் தொகுதி, வடபழனி, அழகர் நகரில் கழிவு நீரகற்றும் நிலையம் அமைக்க வேண்டும். சிஐடி நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையம் தேவை இருக்கின்றது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றார் போல முன் அமைக்கப்பட்ட சிறிய குழாய்கள் மூலமாக அதிக கழிவுகள் செல்ல முடியாமல் குடிநீருடன் கலப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. பழைய கழிவுநீர் பைப் லைன்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘கழிவுநீர் பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஜனவரி 2020ல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்கு கழிவு நீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கழிவு நீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து காணப்படுவதால் உந்து நிலையும் அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
இதுகுறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மாதவரம், முகப்பேர், ஓட்டேரி, கொரட்டூர், டி.பி சத்திரம், வடபழனி, தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பிரச்சனையை சரிசெய்ய 100 கோடி ரூபாய் முதலமைச்சர் நிதி ஒதுக்கியிருக்கிறார். பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, ‘பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.