கலாஷேத்ரா விவகாரம் – கைதான பேராசிரியர் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
கலாஷேத்ரா பாலியல் வழக்கில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி, தனது கணவரின் கைதுக்கு காரணமான முன்னாள் மாணவி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரியில் பயிலும் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது மனைவி திவ்யா, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தனது கணவருடன் பணியாற்றிய 2 பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின்பேரிலேயே முன்னாள் மாணவி இந்த குற்றச்சாட்டை அளித்துள்ளதாக கூறியுள்ளார். மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன், அனைவரது முன்னிலையிலும் தனது கணவரை பாராட்டியதாகவும், அதனால் 2 பெண் பேராசிரியர்களும் பொறாமையில், முன்னாள் மாணவியை தூண்டிவிட்டு பொய் புகாரை அளித்துள்ளாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மாணவி, கலாஷேத்ராவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரிடம் தனது கணவர் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் அவர், பொய்யான புகாரை அளித்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் பெண் அதிகாரி தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.