ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை எந்தவொரு வழியிலும் வெளியிடக் கூடாது – மத்திய அரசு எச்சரிக்கை
ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை வெளியிடும் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை எந்தவொரு வழியிலும் வெளியிடக் கூடாது என்று கடந்த ஆண்டு ஜூன் 13 மற்றும் அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் ஊடகங்களுக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு மீண்டும் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், சூதாட்ட இணையதளங்கள் குறித்த விளம்பரங்களை அண்மைக்காலமாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தனது வலைதளத்தில் விளையாட்டுப் போட்டிகளைக் காணுமாறு பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட சூதாட்ட வலைதளங்கள் ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை எந்தவொரு வடிவிலும் வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தளங்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறினால், விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.