பிரான்ஸ் ஓய்வூதிய வயது எல்லை மாற்றத்தால் கொதித்தெழும் மக்கள் – ஏன்?

மனித வாழ்க்கைக் காலம் உயர்வு பெற்றிருப்பது அறிவியல் வளர்ச்சியின் மிகப்பெரிய ஆதாயங்களுள் ஒன்று.

மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள எண்ணிலடங்காச் சாதனைகள் மனிதர்களின் இறப்பைத் தொடர்ந்தும் தள்ளிப் போட்டுக்கொண்டே செல்கின்றன.

இதனால், பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள முதியோரின் எண்ணிக்கை உலகளாவிய அடிப்படையில் அதிகரித்துச் சொல்வதைக் காண முடிகின்றது. அதேவேளை, குறிப்பிட்ட காலம் பணியாற்றிய பின்னர் ஓய்வூதியம் பெறும் நிலையில் உள்ளவர்களுக்கு நீண்டகாலம் ஓய்வூதியம் வழங்கியாக வேண்டிய நிலைக்கு அரசாங்கங்கள் தள்ளப்பட்டுள்ளன.

மக்கள் நலனைக் கவனத்தில் கொள்ளாமல், பெரு முதலாளிகளின் நலன் பேணும் அரசாங்கங்களால் இந்தச் சுமை(?)யைத் தாங்கிக் கொள்ள முடியாத சூழலில் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை உயர்த்தும் நடவடிக்கைகளில் அவை ஈடுபட்டுள்ளன. இது ஒரு உலகளாவிய போக்காக அண்மைக்காலத்தில் அவதானிக்கப்படுகின்றது.

யதார்த்தத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு முடிவாகத் தெரிந்தாலும், ஓய்வூதிய வயதெல்லையை உயர்த்தும் திட்டத்தில் உள்ள தெளிவின்மை மற்றும் குளறுபடிகள் காரணமாக அவை மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகின்றன. இந்த எதிர்ப்பை ஒருமுகப்படுத்தும் பணியில் இறங்கும் தொழிற்சங்கங்கள் அவற்றை அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்றும் வேளையில் அமைதியின்மை தோன்றுவதை அவதானிக்க முடிகின்றது.
இத்தகைய ஒரு நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பிரான்ஸ் நாட்டில் பேரணிகள், வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்த செய்தியே.

ஆனால், நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளி, தனது தனிப்பட்ட அதிகாரத்தைப் பாவித்து அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் ஓய்வூதிய வயதை 62இல் இருந்து 64ஆக அதிகரிப்பதாக வெளியிட்ட அறிவிப்பு நாட்டைப் பற்றியெரியும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றது.

அரசாங்கத்தின் முடிவை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் கிரமமான இடைவெளியில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில் 10ஆவது போராட்டம் கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதிலும் பரவலாக நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் 10 இலட்சம் வரையான மக்கள் பங்கெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

(Photo by CHARLY TRIBALLEAU / AFP)

தலைநகர் பாரிசில் நடைபெற்ற போராட்டங்களின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதன்போது 27 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலை நாடுகளைப் பொறுத்தவரை ஜனநாயகப் போராட்டங்களுக்கு அங்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் மக்கள் போராட்டங்களுக்குத் தனி மவுசு உள்ளது.

முதலாளித்துவ நாடாக இருந்தாலும், இடதுசாரிக் கருத்துகளைக் கொண்ட தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ள அந்த நாட்டில் எந்தவொரு மக்கள் போராட்டமாக இருந்தாலும் அது பெருமளவான மக்கள் பங்கேற்புடன் நடைபெறுவதைக் காண முடியும். அது மாத்திரமன்றி, இத்தகைய போராட்டங்களில் முன்னணி வகிப்போர் தளர்ச்சி எதுவும் இன்றி தமது இலக்கு நிறைவேறும் வரை தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடும் வழக்கமும் உள்ளது.

இத்தகைய போக்கிற்கான கிட்டிய கடந்தகாலத்தில் ஒரு எடுத்துக்காட்டாக மஞ்சள் அங்கிப் போராட்டத்தைக் கூற முடியும். 2018இல் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் போராட்டம் மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தது மாத்திரமன்றி, அரசாங்கத்தையும் பணியச் செய்திருந்தது.

தற்போதைய போராட்டம் அத்தகைய வெற்றியைப் பெறுமா என்பது வெகுவிரைவில் தெரியவரும். இலட்சக் கணக்கான மக்கள் விதிகளில் இறங்கிப் போராடும் நிலையிலும், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையிலும் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவரப் போவதில்லை என மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை ஓய்வூதிய வயதை அதிகரிக்காதுவிட்டால் அரசாங்கம் மிகப் பாரிய நெருக்கடியைச் சந்திக்கும். ஆனால் போராடும் மக்களைப் பொறுத்தவரை ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் சட்டம் விலக்கிக் கொள்ளப்படாதுவிட்டால் மக்ரோன் வீட்டுக்குப் போக நேரிடும்.

சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது சட்டம் மட்டுமல்ல, அது நிறைவேற்றப்பட்ட விதமும்தான். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத மக்ரோன், சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தால் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்பதை நன்கு தெரிந்து கொண்டே அதனைத் தவிர்த்துக் கொண்டார். பதிலாக, தன்னிடம் உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

ஆனால், அதன் விளைவாக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்பதை உணரத் தவறிவிட்டார்.

அது மாத்திரமன்றி, மக்கள் எழுச்சியை அடக்குவதற்கு காவல்துறையினரையும் பயன்படுத்தி வருகின்றார். காவல்துறையினரும் தமது அதீத பலத்தைப் பாவித்து மக்கள் எழுச்சியை முடக்க முயற்சித்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில் பிரதான தொழிற்சங்கங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தலைமை அமைச்சர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார். பிரதான தொழிற்சங்கமான பிரான்ஸ் ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் லவ்றன்ற் பேர்கர் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளார்.

பெரும்பாலும் இந்தப் பேச்சுவார்த்தை ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறலாம் என நம்பப்படுகின்றது.

ஆனால், தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்ற அறிவிப்பு அரசாங்கத் தரப்பில் இருந்து தொடர்ச்சியாக வெளியாகிவரும் நிலையில் பேசுவதற்கு என்ன இருக்கிறது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேவேளை, போராட்டத்துக்கான மக்கள் ஆதரவு நிதமும் அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்க அறிவிப்புகளைப் போன்று “போராட்டக்காரர்களுடன் வெளிநாட்டு பிரசைகள் சிலர் கலந்துள்ளதாகவும், அவர்கள் வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன் உள்ளதாகவும்” பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை, போராட்டங்களைக் கையாள வன்முறையைப் பிரயோகிக்க அரசு நினைக்கிறதோ என்ற ஐயத்தைத் தோற்றுவித்துள்ளது.

தற்போதைய நிலையில் அடுத்த சுற்று வேலைநிறுத்தமும், ஆர்பாட்டங்களும் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தம் என்பவை காரணமாக பிரான்சில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருட்களுக்கான தட்டுப்பாடு குறிப்பாக எரிபொருளுக்கான தட்டுப்பாடு சில பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசுத் தலைவர் மக்ரோனின் செல்வாக்கு ஏலவே சரிவைச் சந்தித்துள்ள நிலையில் தற்போதைய நிலவரம் அவரது அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்கு உட்படுத்தி உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தொடரும் ஸ்திரமற்ற நிலமை காரணமாக உலக வல்லரசுகளுள் ஒன்றான பிரான்ஸ் உள்நாட்டில் மாத்திரமன்றி உலக அரங்கிலும் தனது செல்வாக்கை வெகுவாக இழந்து வருகின்றமையைக் காண முடிகின்றது.

பிரான்ஸ் நாட்டுக்கு இராஜாங்க விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த பிரித்தானிய அரசர் சார்ள்ஸ் மக்கள் போராட்டங்களைக் காரணம் காட்டி தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.

ஒரு வகையில் பார்த்தால் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்யும் தார்மீக உரிமை மக்ரோனுக்கு உள்ளது எனலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அதற்கான மக்கள் ஆணையை அவர் கோரியிருந்தார்.

தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்த போதிலும் வாக்களித்த மக்களைப் பொறுத்தவரை தீவிர வலதுசாரி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்குடனேயே மக்ரோனுக்கு வாக்களித்ததாகவும், ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்காக அல்ல எனவும் தெரிவிக்கின்றனர்.

வாக்காளர்கள் இவ்வாறு தெரிவிப்பது யதார்த்தமானதே. ஒரு தேர்தலின் போது வாக்களிப்பவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் ஏற்றுக் கொண்டு வாக்காளித்தார்கள் என்ற முடிவுக்கு வர முடியாது.

பிரான்சில் தற்போது உள்ள பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?

மக்கள் குரலுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதா அல்லது அரச அதிகாரததுக்கு மக்கள் பணிந்து போவதா?

தொழிற்சங்கங்கள் வேண்டுவதைப் போன்று பதட்டத்தைத் தணிக்கும் நோக்குடன் அரசாங்கம் இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதை ஒத்திப்போட முன்வந்தாலும் கூட இதே பிரச்சினை மீண்டும் வேறு ஒரு காலகட்டத்தில் தலைதூக்கவே செய்யும் என்பதே யதார்த்தம்.

மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான திட்டமிடலும் கலந்துரையாடலுமே எதிர்காலத்தில் ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கு உதவும். உலக நாடுகள் பலவற்றின் அனுபவங்கள் அவ்வாறே அமைந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.