தமிழ் – சிங்கள மீனவர்கள் மோதல்: பொலிஸ் பேச்சாளர் விளக்கம்!
திருகோணமலையில் தமிழ் – சிங்கள மீனவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கடலூர் மற்றும் அதனை அண்டிய விஜிதபுர ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 6 மீனவர்களும் திருகோணமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குவலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அயல் கிராமத்தைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுருக்கு வலையைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கிடையிலும் வாய்த்தர்க்கம் முற்றி, கரையோரத்தில் மோதலாக மாறியது.
இரண்டு தரப்பினரும் கற்கள், கொட்டான்களால் தாக்கிக் கொண்டுள்ளனர். இரண்டு தரப்பிலும் தலா 3 பேர் வீதம் 6 பேர் காயமடைந்ததுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.