ரணில் அரியணை ஏறாவிட்டிருந்தால் பட்டினியால் சாவடைந்திருப்பர் மக்கள்! – பந்துல கூறுகின்றார்.
“ரணில் விக்கிரமசிங்கவை நாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யாவிட்டிருந்தால் நாட்டு மக்கள் பட்டினியால் சாவடைந்திருப்பார்கள்.”
இவ்வாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியவுடன் அன்று பிரதமர் பதவிலிருந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவானார். அவர் இன்று துணிச்சலுடன் சவால்களை எதிர்கொண்டு வெற்றிநடை போடுகின்றார். அவரை அன்று நாம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யாவிட்டிருந்தால் நாட்டு மக்கள் பட்டினியால் சாவடைந்திருப்பார்கள்.
ரணிலின் ஆட்சியால் நாடு முன்னோக்கிய பாதையில் செல்கின்றது. குறுகிய காலத்தில் நாம் மீண்டெழுந்து வருகின்றோம். சர்வதேசம் எமது நாட்டுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது.
இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்தை நம்பியிருக்கக்கூடாது. சர்வதேசத்திடம் வாங்கிய கடன்களை மீளச் செலுத்திவிட்டு சொந்தக் காலில் இலங்கை பயணிக்க வேண்டும் என்பதே ரணிலின் விருப்பம். அவருக்கு அனைவரும் தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும்.” – என்றார்.