யாழில் 80 வயதுப் போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம்! – திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்.
யாழ்ப்பாணம் – இருபாலையிலுள்ள கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகள் சிலர் அங்குள்ள தலைமைப் போதகரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமைப் போதகரை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவர் தப்பித்துச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி மாணவர் விடுதியிலிருந்து சிறுமிகள் தப்பியோடியதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் மாணவர் விடுதியாகப் பதிவு செய்து சட்டவிரோதமாக இயங்கியமை கண்டறியப்பட்டது. அதையடுத்து இல்லத்திலிருந்த சிறுமிகள் மீட்கப்பட்டு வேறு இல்லங்களுக்கு மாற்றப்பட்டனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுமிகளுக்கு மண் நிரப்பிய பைப்பால் அடித்துத் தண்டனை வழங்கப்பட்டது என்றும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. அங்கு தங்கியுள்ள 80 வயது தலைமைப் போதகர் சிறுமிகளை தனியே அழைத்து அவர்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்டுள்ளமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விடுதியில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் தாம் கற்கும் பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களிடம் தெரியப்படுத்தினால் அவர்கள் விடுதி நிர்வாகத்தினருக்குத் தெரியப்படுத்துவதால், தாம் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுமிகள் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜெப ஆலயத்தின் மதபோதகர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைப்போதகரைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகள் எடுத்தபோதும் அவர் தப்பிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.