கோயில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலக்குறைவு!

மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்திற்கு உட்பட்ட சத்தால் என்ற கிராமத்தில் இரு நாள்களுக்கு முன்பு கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் பலர் திரளாக பங்கேற்றனர். திருவிழா நடைபெற்ற பகுதியில் தினேஷ் குஷ்வாஹா என்ற நபர் குல்ஃபி ஐஸ் கிரீம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இந்த ஐஸ் கிரீமை பலரும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஆனால், சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே அவர்கள் கடும் உடல் நலக்குறைவுக்கு ஆளாகியுள்ளனர். வாந்தி, வயிற்று வலி போன்ற பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் குழந்தைகள். பாதிப்புக்குள்ளானவர்கள் வரிசையாக அருகே உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அன்றைய தினம் 25 குழந்தைகள் உட்பட 55 பேர் இந்த ஐஸ் கிரீம் சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 2 குழந்தைகள் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பின்னர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் உடல்நிலை சீராக்கப்பட்டது. இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், திருவிழா நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று கடையில் ஆய்வு நடத்தினர். மேலும், அங்கு ஐஸ்கிரீம் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். இதுவரை 30 பேர் உடல் நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.