கர்ப்பிணித் தாயின் சாவுக்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் இந்திய மயக்க மருந்துகளுக்கு தடை
இந்திய மருந்துகளுக்கு பதிலாக , மியன்மார் வழங்கிய மருந்தும் , இலங்கையின் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பேராதனை வைத்தியசாலையில் பிரசவத்தின் போது உயிரிழந்த இளம் தாய்க்கு வழங்கப்பட்ட மயக்க மருந்துஈதொகுதியை , உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாவனையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அரசாங்க மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்துகள் அதிகாரசபையின் பணிப்பாளரின் எழுத்துமூல ஆவணத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்திய மருந்து நிறுவனத்தினால் இந்திய கடன் உதவியுடன் அண்மையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மருந்து , நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், விநியோகிக்கப்பட்ட மூன்று பகுதிகளும் தற்போது தற்காலிகமாக பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்படும் மருந்துகள் இலங்கையில் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த முடியாததால், அந்த மருந்தில் எழுதப்பட்டுள்ள விபரங்கள் மற்றும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் விதம் ஆகியவற்றை வைத்தே இலங்கையில் அவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மயக்க மருந்து நிறுத்தப்பட்டதன் காரணமாக வைத்தியசாலைகளில் கடுமையான மயக்க மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பற்றாக்குறையை ஈடுகட்ட ஏற்கனவே பெறப்பட்ட மியான்மர் அரசின் உதவிகளாக கிடைத்துள்ள , 40,000 ஊசி மருந்துகளை மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் டாக்டர் விக்ரமநாயக்க தெரிவித்தார். .