மரண தண்டனைக் கைதி பிரேமலால் நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதி

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குறித்த இடைக்கால உத்தரவு இன்று வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுமதி தருவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படுகின்ற சட்டத்துக்கு அமையவும், அரசமைப்பின் 89ஆவது பிரிவின் (ஈ) மற்றும் 91 (1) (அ) ஆகிய உப பிரிவுகளின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கோ, வாக்களிப்பதற்கோ உரிமை இல்லை என சட்டமா அதிபர் தனது கருத்தை, கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், நாடாளுமன்ற பொதுச்செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தார்.

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்துள்ளதற்கு அமைய, தீர்ப்பு அறிவிக்கப்பட்டு உறுதிப்படுத்தாத நிலையில், தன்னை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு அவர் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய, அவரை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள இடைக்கால உத்தரவை வழங்கியுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான வசதிகளை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.