போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய செயலி – அறிமுகப்படுத்திய உக்ரைன் அரசு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 13 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரின்போது உக்ரைனில் இருந்து பல ஆயிரக்கணக்கான குழந்தைகளை ரஷியா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும், அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர் எனவும் ரஷியா மீது உக்ரைன் குற்றம் சாட்டியது. இதனை மறுத்த ரஷியா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்துச் சென்றதாக கூறியது.
இதற்கிடையே குழந்தைகளை கடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், போரில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் சேர்ப்பதற்காக `ரீயூனைட் உக்ரைன்’ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி போரால் பிரிந்த குடும்பங்களை இணைக்க உதவிகரமாக இருக்கும் என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.