போதகர் தலைமையில் ‘உதயன்’ அலுவலகத்துக்குள் புகுந்து மதக் குழுவொன்று பெரும் அட்டூழியம்!

யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியிலுள்ள ‘உதயன்’ பத்திரிகை தலைமையகத்துக்குள் அத்துமீறிப் புகுந்து போதகர் ஒருவர் தலைமையிலான மதக்கும்பல் ஒன்று, ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்தி பெரும் அடாவடியில் ஈடுபட்டது.

யாழ்., அச்சுவேலியில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் தலைமையில் வந்த சுமார் 30 பேர் கொண்ட கும்பலே இந்தக் காட்டுமிராண்டித்தனமான காரியத்தில் ஈடுபட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் தீவிர விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீடு புகுந்து தாக்குதல்

அச்சுவேலியில் உள்ள ’அசெம்ளி ஒஃப் ஜீவ வார்த்தை’என்ற மதக்குழுவின் போதகர் உட்பட மூவர் நேற்றுமுன்தினம் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். சபைக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களை கழுத்தை நெரித்துத் தாக்கினர் என்ற முறைப்பாட்டுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த போதகரும், ஏனையோரும் தன்னையும், வீட்டிலிருந்த தாயையும் தாக்கினர் என்று வங்கி உத்தியோகத்தரான பெண் அச்சுவேலிப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பாதிப்புக்குள்ளான பெண் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.

அதிக ஒலி எழுப்பப்பட்டமையால் ஏற்பட்ட முரண்பாடு இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அயல் மக்கள் கூறுகின்றனர். ஆனால், சபை மீது கற்கள் வீசப்பட்டமையாலேயே அந்த வீட்டுக்குச் சென்றோம் என்று போதகரும், ஏனைய இருவரும் பொலிஸ் விசாரணையில் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான செய்தி நேற்றைய ‘உதயன்’ பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

ஆரம்பமே அடாவடி

நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை தலைமையகத்துக்கு மினி பஸ் ஒன்றிலும், பட்டா ரக வாகனம் ஒன்றிலும் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என்று சுமார் 30 பேரைக் கொண்ட கும்பல் ஒன்று வந்திறங்கியது.

அலுவலகப் பாதுகாப்பு உத்தியோகத்தரை மீறி அந்தக் கும்பல் வரவேற்பறைக்குள் அத்துமீறி நுழைந்து “போதகரைப் பற்றி எப்படிச் செய்தி போடுவீர்கள்?”, “யார் இந்தச் செய்தியைத் தந்தார்கள்?” என்று சத்தமிட்டு, தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து, அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், அங்கு பணியில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டது.

இது தொடர்பாக ஆசிரிய பீடத்துக்கு அறிவிக்கப்பட்டு ஆசிரிய பீடத்தினர் வரும் முன்னர் அலுவலக வாயிலை மறைத்து, எவரும் உள்ளே செல்லமுடியாத வகையில் தரையில் அமர்ந்து அட்டகாசம் செய்யத் தொடங்கியது அந்த மதக் கும்பல்.

பத்திரிகைக்கு அச்சுறுத்தல்

‘உதயன்’ ஆசிரிய பீடப் பணியாளர்கள் இருவர் அந்தக் கும்பலை அணுகி, என்ன கோரிக்கையோடு அவர்கள் வந்துள்ளார்கள் என்று அறியவும், அது தொடர்பில் தீர்வொன்றைக் காணும் வகையிலும் கலந்துரையாட முற்பட்டனர். ஆனால், அதற்கு அந்தக் கும்பல் ஒத்துழைக்கவில்லை.

“போதகர் தொடர்பாக வெளியான செய்தியை எவ்வாறு வெளியிடுவீர்கள்?” என்று கேட்டு அந்தக் கும்பல் குழப்பம் விளைவிப்பதிலேயே குறியாக இருந்தது. தங்களது போதகர் கைது செய்யப்படவில்லை என்றும், பொய்யான தகவல்களை வெளியிடுகிறீர்கள் என்றும் அந்தக் கும்பல் தர்க்கித்ததுடன் ஆசிரிய பீடப் பணியாளர்களைச் சுற்றிவளைத்து அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டது.

‘போதகரும் ஏனைய இருவரும் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுவே உரிய ஆதாரங்களோடு செய்தியாக்கப்பட்டுள்ளது’ என்று அந்தக் கும்பலுக்கு ‘உதயன்’ ஆசிரிய பீடத்தினரால் விளக்கமளிக்கப்பட்டது.

“போதகர் கைது செய்யப்படவில்லை. ஆனால், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று ஒரு புதிய விளக்கத்தை, அந்தக் கும்பல் சொல்லத் தொடங்கியது.

‘கைது செய்யப்பட்டால்தானே பிணையில் விடுவிப்பார்கள்’ என்று ஆசிரிய பீடத்தினர் சொன்னதும், அந்த விடயத்தை விடுத்து சகட்டுமேனிக்கு கூச்சல் எழுப்பி, திசைமாற்ற முற்பட்டது அந்தக் கும்பல்.

‘செய்தியில் தவறு ஏதேனும் இருக்குமானால் அது தொடர்பான ஆதாரங்களையும் விளக்கதையும் சமர்ப்பித்தால், உரிய வகையில் அதை ஆராய்ந்து முடிவெடுப்போம். அவ்வாறில்லாவிட்டால் சட்ட ரீதியாக இந்த விடயத்தை அணுகுங்கள்’ என்று பக்குவமாக ஆசிரிய பீடத்தினரால் அந்தக் கும்பலுக்கு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட போதும், அந்தக் கும்பல் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், காட்டுமிராண்டித்தனமான முறையில், உரத்த கூச்சல், குழப்பங்களில் ஈடுபட்டது.

‘உதயன்’ பத்திரிகை நிறுவனப் பணியாளர்களை அந்தக் கும்பலைச் சேர்ந்தோர் அனுமதியின்றி, கைத்தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்ததுடன், காணொளிப் பதிவும் மேற்கொண்டனர்.

மறைந்திருந்த போதகர்

இந்தக் கும்பலின் அட்டூழியம் தொடங்கியபோது, ‘இந்த விடயத்துடன் நேரடியாகத் தொடர்புடைய எவரேனும் இருந்தால் முன்வந்து பேசுங்கள்’ என்று உதயன் ஆசிரிய பீடத்தினர் கோரிய போது எவரும் முன்வரவில்லை. கும்பலாகச் சுற்றி நின்று பெரும் சத்தமிட்டவண்ணமே இருந்தனர். நீண்ட நேரத்தின் பின்னரே அந்தக் கும்பலில் இருந்த ஒருவர் “நானே அந்தப் போதகர்” என்று வெளிவந்தார்.

‘ஏனையோரை வெளியே அனுப்பிவிட்டு உங்களின் பிரச்சினை தொடர்பில் நீங்கள் பேசுங்கள்’ என்று கேட்ட போது, “என் மீதுள்ள விசுவாசத்தில் அவர்கள் கதைக்கின்றார்கள்” என்று கூறிய போதகர், உதயன் ஆசிரிய பீடத்தினருடன் பேசுவதைத் தவிர்த்தார்.

தாக்க முயற்சி

ஒருகட்டத்தில் அந்தக் குழு ஆசிரிய பீடப் பணியாளர்களைச் சுற்றிவளைத்து அவர்களைத் தள்ளி தாக்குதல் நடத்தும் வகையில் செயற்பட ஆரம்பித்தது. அதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ‘உதயன்’ தலைமையகத்துக்குள் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வீதிக்குச் சென்று அங்கு நின்றிந்த மினிபஸ் மற்றும் பட்டா ரக வானத்துக்குள் ஏறினர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். அதை அவதானித்த அந்தக் கும்பல் அங்கிருந்து நழுவத் தொடங்கியது.

இறுதி வரையில் உதயனில் வெளியான செய்தியில் தவறு உள்ளதா? என்பது தொடர்பில் அந்தக்கும்பல் எதுவும் கூறவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதகரின் பின்னணி

’அசெம்ளி ஒஃப் ஜீவ வார்த்தை’ என்ற இந்த மதச்சபையின் போதகர் ஆரம்பத்தில் இன்னொரு சபையின் போதகராகவே இருந்தார். ஆயினும், அந்தச் சபையினர் குறித்த போதகரை இடைநிறுத்தியதால், தனியாக ’அசெம்ளி ஒஃப் ஜீவ வார்த்தை’ என்ற பெயரில் மதக் குழுவைத் தொடங்கி நடத்தி வருகின்றார்.

இந்தச் சபைக்கு சொந்தமான தேவாலயம், பொதுக்காணியொன்றை அடாத்தாகப் பிடித்தே அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குவியும் கண்டனங்கள்

கிறிஸ்தவ மக்களின் புனிதநாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் குறித்த மதச் சபை மிலேச்சத்தனமாக நடந்து கொண்டமைக்கும், ஊடக நிறுவனத்துக்குள் அத்துமீறி, அச்சுறுத்தி நிகழ்த்திய அட்டூழியத்துக்கும் பல தரப்புகளும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.