மத மோதல் காரணமாக ஜார்கண்டில் வெடித்த வன்முறை…144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவை முடக்கம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராம நவமி விழா கொண்டாட்டம் தொடர்பாக ஏற்பட்ட மத மோதல்கள் வன்முறை சம்பவங்களாக மாறியுள்ளன. எனவே, அம்மாநிலத்தில் உள்ள ஜம்ஷெத்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்னர் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், சில மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. ஜார்கண்ட் மாநிலத்திலும் சில மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ராம நவமி விழா ஏற்பாடு செய்த அமைப்புகள் தங்கள் கொடிகளை ஒரு தரப்பினர் அவமதிக்கும் விதமாக அதில் இறைச்சியை வைத்து சென்றதாக புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடியை அவமதித்தவர்கள் மீது 24 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக நேற்று முதல் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. நேற்று மாலை நடைபெற்ற போராட்டத்தின் போது இரு தரப்பும் கல் வீசி தாக்கிக்கொண்டதில் கடைகள் சூறையாடப்பட்டன. ஒரு ஆட்டோவை மர்ம கும்பல் தீவைத்து கொளுத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதற்றமான பகுதிகளில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பேசிய காவல் கண்காணிப்பாளர் பிரபத் குமார், சட்டம் ஒழுங்கை நில நாட்ட போதிய காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வன்முறை குழுக்களை ரோந்து படை விரட்டி அடித்து கலைத்துள்ளது.
சிலர் கைது செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், உஷார் நிலையை உணர்த்தும் விதமாக சில பகுதிகளில் காவல்துறை கொடி பேரணி நடத்தியுள்ளனர். சமூக விரோத சக்திகளை அடையாளம் காண அதிரடி படையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.