இப்படியானால் சுற்றுலாவில் வெளிநாட்டவர் வருவார்களா? 2 நாட்களில் சுற்றுலா பயணிகளிடமிருந்து 04 குற்றப் பதிவுகள்
ஒரு பெண் உல்லாச பயணியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற , முச்சக்கர வண்டி சாரதியின் நடத்தையை இன்ஸ்டாகிராமில் நேரலையாக ஒளிபரப்புகிறேன் என எச்சரித்ததனால் , தனக்கு ஏற்பட இருந்த விபரீதத்திலிருந்து தப்ப முடிந்தது என 19 வயது கனேடிய பல்கலைக்கழக மாணவி, மிகுந்த விருப்பத்துடன் வந்த இலங்கையில் இப்படியா என அச்சத்துடன் கூடிய தருணத்தை ஒரு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
Guenevre Talec என்ற இந்த மாணவி , அஹங்கம பிரதேசத்தில் கடந்த 08ம் திகதி அதிகாலை 2.30 மணிவரை இரவு விருந்தொன்றில் கலந்துகொண்டு விட்டு , முச்சக்கர வண்டியொன்றில் தான் தங்கியிருந்த வெலிகம விடுதிக்கு செல்ல ஏறியுள்ளார்.
பாதி வழியில், இருண்ட இடமொன்றில் முச்சக்கர வண்டியை நிறுத்திய சாரதி, தகாத விதத்தில் நடந்து கொள்ள முற்பட்ட போது , இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் , இப்போது நடப்பது நேரலையாக ஒளிபரப்பாகிறது எனக் கூறி போராடியதோடு , உடனடியாக தான் தங்கியுள்ள வெலிகம விடுதிக்கு கொண்டு போய்விடுமாறு சொன்னதால் அவர் தப்பியுள்ளார். அச்சமயம் நடந்த சம்பவத்தின் ஒரு பகுதியை அவரால் ஒளிப்பதிவு செய்யவும் முடிந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்த மாணவி தங்கியிருக்கும் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம், சம்பவம் தொடர்பில் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடவிருந்த அறிக்கையினால் நாட்டுக்கும் , தங்களுக்கும் ஏற்படவிருந்த பாதிப்பை தடுக்க, தாங்கள் பெரும் சமரச முயற்சியில் அந்த மாணவியிடம் மேற்கொள்ள வேண்டியதானது என தெரிவித்துள்ளார்கள்.
இச் சம்பவத்தையடுத்து அந்த இளம்பெண் பதற்றத்துடன் விடுதியின் அறையை விட்டு வெளியே வரவில்லை எனவும், இந்த பயணத்தின் நோக்கம் தனது சொந்த கல்விக்கானதாக இருந்ததாலும், மேலும் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்பதாலும் , போலீசில் புகார் செய்வதில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது போன்ற வழக்குகள் போலீசில் புகார் செய்யப்படுவதில்லை என்றும், சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் அன்னிய செலாவணியை ஈட்டுவதுதான் இந்நாட்டின் நோக்கம் என்றால், விளம்பரங்களை செய்வதை விட, சுற்றுலாவை இலக்காகக் கொண்ட சட்ட அமைப்பை கடுமையாக்குவதும், உள்நாட்டு ஒழுக்கத்தை பாதுகாப்பதும் மிக அவசியம் என்றும் ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களில் இதுவரை சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான 03 பாரிய குற்றச் செயல்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. ஹிக்கடுவ மொலபு ஓயா, தோட்டகமுவ பாலத்திற்கு அருகில் ரஷ்ய பெண் ஒருவரின் சடலம் நேற்று (08) கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் பின்னணியில் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தப் பெண் கடந்த மூன்று மாதங்கள் இலங்கையில் தங்கியிருந்துள்ளார்.
கடந்த 07ம் திகதி அனுராதபுரத்தில் இருந்து சீகிரியாவுக்குச் சென்று கொண்டிருந்த போது தனது பையில் இருந்த 480 யூரோக்கள் கொண்ட பணப்பை திருடப்பட்டுள்ளதாக செக் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
08ம் திகதி மிதிகம கடற்கரையில் , தனது உடைகளை பக்கத்தில் வைத்துவிட்டு , நீச்சல் உடையோடு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 26 வயதுடைய ரஷ்ய இளைஞனின் கால்சட்டையிலிருந்து , 600 டொலர் பணம் மற்றும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி என்பன திருடப்பட்டுள்ளன.