500 ஜிம் பாய்ஸ் சூழ வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா!
சூர்யா நடித்து வரும் அவரது 42வது படத்தை சிவா இயக்கி வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக பத்து மொழிகளில் படம் தயாராகி வருகிறது. சூர்யாவின் மற்ற படங்களைவிட இரு மடங்கு பட்ஜெட் இந்தப் படத்திற்கு என்கிறார்கள்.
இந்தக் கதையில் சூர்யா பல வித தோற்றங்களில் வருகிறார். இதன் மோஷன் வீடியோவில்கூட, அரந்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என ஒவ்வொரு லுக்கின் பெயர்களும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. இயக்குநர் சிவாவின் ஆஸ்தான டீம் இதிலும் பணியாற்றி வருகின்றனர். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். தேவி ஶ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். இதன் ஹிந்தி ரைட்ஸ் நூறு கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருகிறது. சென்னை, கோவா ஆகிய இடங்களைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் எண்ணூரில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
இந்நிலையில் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தின் டைட்டில் வெளியாகிவிடும் என்றும் `அக்னீஸ்வரன்’, `கருடா’ இவற்றில் எதாவது ஒரு டைட்டிலாக இருக்கும் என்றும் பேச்சு இருந்தது. ஆனால் இவ்விரண்டும் தவறான தகவல். இந்தக் கதை தற்கால கட்டத்தையும், பீரியட் போர்ஷனும் கொண்ட கதையாகும். இதுவரை 45 சதவிகித படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. கதைக்கு தொடர்புடைய தூய தமிழ்ப் பெயர்களில் நான்கைந்து பெயர்கள், டைட்டிலுகாகப் பரிசிலீக்கப்பட்டு, அதில் ஒன்றை தேர்வு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். படம் பொங்கலுக்குத்தான் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. ஆக, வருகிற 16ம் தேதி முன்பு வெளியான மோஷன் வீடியோ போல அனிமேஷன் வீடியோ வெளியாகிறது. அதில் தான் டைட்டிலும், ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே சென்னையில் பீரியட் காலகட்டத்துக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட ஜிம்பாய்ஸ் பங்கேற்ற புரோமோ ஒன்று, படமாக்கி உள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெற்றது. அந்த புரோமோ வீடியோவில் வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா இருந்தார் என்றும், யூனிட்டே வியந்தது என்றும் சொல்கிறார்கள். அந்த வீடியோவை அடுத்த மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.
தவிர, இதுவரை படமாக்கப்பட்ட 45 சதவிகித போர்ஷனும் தற்கால கட்ட போர்ஷன் தானாம். இனிமேல்தான் பீரியட் காலகட்ட போர்ஷனுக்கான படப்பிடிப்பு துவங்குகிறது. இது மாலத்தீவு அல்லது பிஜூ தீவுகளில் படமாக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அதில் மாறுதல். சென்னையில் அதற்கான அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். செட்கள் ரெடியானதும் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். அதற்கு முன்னதாக புரோமோ வீடியோ வெளியாகிவிடும் என்றும் சொல்கிறார்கள்.