கால் மீது கால் போட்டு அமர்பவரா நீங்கள்? பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்.
`ஸ்டைலா கெத்தா’ எனக் கால் மீது கால் போட்டு (cross – legged) உட்கார்பவர்களைப் பார்த்திருப்போம். இப்படி உட்கார்வது சௌகர்யமாக இருப்பதாகப் பலரும் கூறுவதுண்டு. ஆனால், இப்படி அமர்வது நல்லதல்ல, பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு குறித்த முடிவுகள் `International Journal of Environmental Research and Public Health’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.
இது குறித்து இடுப்பு எலும்புகளுக்கு சிகிச்சையளிக்கும் தெரபிஸ்ட் ஹீதர் ஜெஃப்கோட் கூறுகையில், `கால் மீது கால் போட்டு அமர்வது, இடுப்பு எலும்புகளை ஒன்றை விட மற்றொன்று நீளமாக வைக்கும். இது இடுப்பின் சீரான நிலையில் மாற்றத்தை (misalignment) உருவாக்கும்.
ஒருவர் எவ்வளவு நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர்களின் இடுப்புத் தசையின் நீளம் மற்றும் எலும்புகளின் அமைப்பு காலப்போக்கில் மாறும்.
கால்கள் குறுக்காக வைத்து உட்கார்வது, உங்கள் இடுப்பில் தசை முறிவை ஏற்படுத்தலாம். உங்களுக்கு முதுகு அல்லது இடுப்பு பிரச்னைகள் இருப்பின், அந்தப் பிரச்னைகளை மேலும் தீவிரமாக்கலாம்.
ஒரு பக்க பிட்ட தசைகளை (bum muscles) மட்டும் நீண்ட காலமாகக் குறுக்காக வைத்திருப்பது அவற்றை வலுவிழக்கச் செய்யும். அதுமட்டுமல்லாமல், முதுகெலும்பு மற்றும் தோளின் அமைப்பும் நிலைமாற வாய்ப்புள்ளது.
இப்படி அமருகையில் இடுப்புக்கு மேலே உடலின் ஈர்ப்பு மையத்தை நடுநிலையில் வைத்திருக்க முதுகெலும்பு முயலும். இதனால், கழுத்தின் எலும்புகளில் மாற்றம் ஏற்பட்டு, தலையின் பொசிஷனும் மாறும்.
உடலின் ஒருபக்கம் மற்றொரு பக்கத்தைவிட வலுவிழந்ததாக மாறும். கழுத்தும் இந்த விளைவுகளை எதிர்கொள்ளும். இடுப்பு மற்றும் தொடையின் வெளிப்புறத்தைப் பாதிக்கும் அசௌகர்ய நிலையான `trochanteric pain syndrome’ பாதிப்பும் வரலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், கால் மீது கால் போட்டு அமர்வது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எலும்பு முறிவு மற்றும் காயத்தை ஏற்படுத்தும்.
அதோடு விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும். ஏனெனில், விந்தணுக்களின் வெப்பநிலை உடலின் மற்ற பகுதிகளைவிட இரண்டு முதல் ஆறு டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க வேண்டும்.
ஆனால் உட்காருவதால், விதைப்பைகள் (Testicles) இரண்டு டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையும். கால் மீது கால் போட்டு அமர்வது விதைப்பைகளின் வெப்பநிலையை 3.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, `காலின் உயரம் சரிசமமாக இல்லாதவர்கள், கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது இடுப்பின் இரு பக்க உயரத்தைச் சரி செய்ய உதவும்’ என 2016-ல் வெளியிடப்பட்ட `PLOS ONE’ என்ற இதழ் குறிப்பிட்டுள்ளது.