உலகளவில் புலிகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் இந்தியா
இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல.. பல லட்சம் உயிரினங்களின் கூட்டுத்தொகுப்பாகவே உலகம் இயங்கி வருகிறது. 2021ஆம் ஆண்டு தரவுகளின்படி இந்தியாவில் 8 கோடி ஹெக்டேர் அளவு வனப்பகுதி உள்ளது. இதில் மரங்கள், செடிகொடிகள் மற்றும் அது சார்ந்த உயிரினங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் உள்ளன. ஒரு வனத்தின் சூழல் தண்மையைப் பாதுகாப்பதில் புலிகளின் பங்கு என்பது மிகமிக முக்கியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
புலிகள் வசிக்க உகந்த சூழலாக மலைக்காடுகள், பசுமை வெளிகள் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. உலகின் பல நாடுகளிலும் இல்லாத இந்த அம்சங்கள் இந்தியாவின் புவியியல் அமைப்பில் மிக இயல்பாக இருப்பதால் புலிகள் வசிக்க இயல்பான சூழல் உள்ளது. பூமியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்தால் வனவிலங்குகளின் எண்ணிக்கை சமமடைந்து வனப்பகுதியின் சூழல் சீராவதுடன், காடுகள் பாதுகாக்கப்படும் என்கிறது உலக வன வாழ்வியல் அமைப்பான wwf.
ஒரு புலி குறைந்தபட்சம் 50 சதுர கிலோமீட்டரை மிக எளிதாக ஆட்சி செய்யும் என்று புலிகள் தொடர்பான ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் புலிகள் வேட்டையாடப்படுவது கவுரமாகக் கருதப்பட்ட நிலையில் வேட்டையாடுவது பின்னர் தடை செய்யப்பட்டு, வனவிலங்குகளைப் பாதுகாக்கச் சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
54 சரணாலயங்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பானது 75 ஆயிரம் சதுர கிலோமீட்டராக உள்ளது. எனினும் புலிகளின் வாழ்விடம் என்பது 93 விழுக்காடு வரை மனித நடமாட்டத்தால் சுருங்கிப்போய் உள்ளது.
இந்தியாவில் உள்ள 30 விழுக்காடு புலிகள், சரணாலயங்களுக்கு வெளியே வசிக்கின்றன. புலிகள் வசிக்கும் இடங்களைக் காப்புக்காடுகளாக மாற்றினால் தற்போதுள்ள எண்ணிக்கையை விடப் பல மடங்கு உயரும் என்கின்றனர் நிபுணர்கள். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வன உயிர் குற்றத்தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் புலிகள் வேட்டையாடப்படுவதும் தவிர்க்கப்படுகிறது.
தற்போது பதிவாகியுள்ள புலிகளின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக 5 ஆயிரம் புலிகள் வரை இந்தியாவில் இருப்பதற்கான சூழல் நிவவுகிறது என்கிறார்கள் வன உயிரில் ஆர்வலர்கள். உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 4ல் 3 பங்கு இந்தியாவில் இருக்கிறது. வேட்டையாடுவதைத் தவிர்த்தாலே புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்பதும் நிபுணர்களின் நம்பிக்கையாக உள்ளது.