முகக்கவசம் அணிவது நல்லது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா நோய் பரவல் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி விஜயபாஸ்கர் நத்தம் விஸ்வநாதன், உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், வேல்முருகன் நாகை மாலி எஸ் எஸ் பாலாஜி உள்ளிட்டோர் கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்
கொரோனா தொற்று பரவி வரக்கூடிய நிலையில் பொதுமக்களும் முகக்கவசம் அணிய வேண்டுமா, இதை பரவாமல் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் முகக் கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் கூறி இருக்கின்றார். மற்ற இடங்களிலும் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டுமா?இதுகுறித்து அவையில் அமைச்சர் விளக்க வேண்டும் என பாமகவின் ஜி.கே.மணி கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து பேரவையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியம் . “ இந்தியாவிலும் தமிழகத்திலும் ஒமிக்ரானின் உருமாற்றமான xbb 1.16 என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த இந்தியாவிலும் 50-க்கும் கீழேதான் தினசரி கொரோனா பரவல் இருந்தது. தமிழகத்தில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு 2-க்கும் குறைவான எண்ணிக்கை தான் இருந்தது. ஆனால் நேற்று தினசரி கொரோனா தொற்று 386 என்ற அளவில் உயர்ந்திருப்பது உண்மை. தமிழகத்தில் மட்டுமல்ல கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவில் 5878 பேருக்கு பாதிப்பு உருவாகியுள்ளது.
கேரளாவில் 2273, டெல்லியில் 484 பேருக்கும், ஹிமாச்சல் பிரதேசத்தில் 422, தமிழகத்தில் 386 பேருக்கு கொரோனா பரவல் உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவித்திருக்கிறோம். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம். மூன்றாவது அலைக்கு பின்னர் முக்கவசம் அணிவதை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. மருத்துவமனைகளில் கொரோனா பரவல் கூடுதலாக இருப்பதால் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
திருப்பூரில் 82 வயது முதியவர் இறந்துள்ளார் அவருக்கு நீண்ட நாட்களாகவே சர்க்கரை நோய் இருந்துள்ளது.தூ த்துக்குடியில் 54 வயது பெரியவர் ஒருவர் இறந்துள்ளார் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்துள்ளது.திருப்பூர் அனுப்பன்பாளையம் சேர்ந்த 60 வயது முதியவர் ரத்தக்கொதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர் அவரும் உயிரிழந்துள்ளார். ’
55ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நிதியை பெற்றுள்ளனர். பெரிய அளவில் பதட்டப்பட வேண்டியதில்லை ஆனாலும் நம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இணை நோய் உள்ளவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 64,281 கொரோனா படுக்கை வசதிகள் தயாராக உள்ளது. தேவைப்பட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த படுக்கை வசதிகள் 1,48,000 ஆயிரம் ஆக தயார் செய்ய முடியும்.தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்பாக பெரிய அளவிலான பதற்றம் எதுவும் இல்லை. இந்த எண்ணிக்கை பெருகும் பட்சத்தில், பொது இடங்களில் பொது நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கொண்டு வரலாம்.