ஈபிஎஸ் பொதுச்செயலாளர் – 10 நாட்கள் அவகாசம் கேட்ட தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கக் கோரிய வழக்கில் 10 நாட்களில் முடிவு செய்யப்படும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு, நீதிபதி புருசந்திரா குமார் கவ்ரவ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில், அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஆவணங்களை சரிபார்த்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த தேர்தல் ஆணையம், 10 நாட்கள் அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று, தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.