சிறுவர் இல்ல சர்ச்சைகள் தொடர்பான ஆராய்வு கிராம அலுவலர் ரீதியாக ஆரம்பம்!

சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள், பாலர் பகல் பராமரிப்பு நிலையங்கள், சிறுவர் விடுதிகள் மற்றும் ஏனைய சிறுவர் தங்குமிடங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தால் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடக்கிலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்புச் சேவைகள் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள், பதிவு செய்யப்பட்ட, தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்ட பகல் பராமரிப்பு நிலையங்கள், தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்ட விடுதிகள் ஆகியவற்றின் விவரம் பிரதேச செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவ்விவரங்களில் கிராம அலுவலர் பிரிவுகளில் இயங்கும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் பற்றிய விவரங்களுக்கு மேலதிகமாக, ஏதாவது நிலையத்தில் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தால் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவரும் சிறுவர்கள் தொடர்பாகவும், அதன் நிர்வாகம் தொடர்பாகவும் கிராம அலுவலர் மூலமான விவரங்களைப் பெற்று அனுப்பிவைப்பதுடன் எதிர்காலங்களில் தாங்கள் அனுப்பியுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள், பாலர் பகல் பராமரிப்பு நிலையங்கள், விடுதிகள் தவிர ஏதாவது புதிதாக இயங்க ஆரம்பித்திருப்பின் அவை பற்றிய விவரங்களை உடனுக்குடன் எமக்கு அனுப்பி வைக்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.