அ.தி.மு.க.வின் ஊழலையும் வெளியிட்டு அண்ணாமலை நடுநிலையாக இருக்க வேண்டும்: சீமான்
மதுரை விமான நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும் என்கிற உறுதியை அம்பேத்கரின் பிறந்தநாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்கள் குறித்து வெளியிட்டுள்ள ஊழல் பட்டியலை நான் வரவேற்கிறேன். இது ஒன்றும் புதிது இல்லை. அவர்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது, அது எப்படி அவர்களுக்கு கிடைத்தது? என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி உள்ளது. அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்திருப்பதால், அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் அனைவரும் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள். அ.தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். இரண்டு பக்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என அறிவிப்பு விட வேண்டும். அண்ணாமலைக்கு நான் வைக்கும் வேண்டுகோள் இது. அ.தி.மு.க.வின் ஊழலையும் வெளியிட்டு நடுநிலையாக இருக்க வேண்டும். அங்கு கூட்டணி வைத்து இருப்பதால் வாயை மூடி இருந்தால் ஊழல் செய்த கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேள்வி கேட்போம். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அ.தி.மு.க. சொத்து பட்டியலை தயவு செய்து வெளியிடுங்கள், நடவடிக்கை எடுங்கள்.
மோசமான ஆட்சி நடைபெறுவதற்கு தலைவர்கள் காரணம் இல்லை, அந்த தலைவர்களை தேர்வு செய்த மக்கள்தான் காரணம் என ஆபிரகாம் லிங்கன் சொல்கிறார். இந்த மாதிரி ஆட்களை சட்டசபைக்கு அனுப்பியது யார்?. எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது. அதை விட்டுவிட்டு ஐ.பி.எல். பார்ப்பதற்கு டிக்கெட் கேட்கிறார்கள்.
மதுரை திருமங்கலத்தில் ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் குதித்து தற்கொலைசெய்து கொண்ட விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால்தான், இதுபோன்ற சம்பவங்கள் அடுத்து நடைபெறாமல் இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.