வடக்கு – கிழக்கு தழுவிய பெரும் போராட்டம் ஏப்ரல் 22 இல் ஆரம்பம்!

தமிழ் மக்களின் மீதான நில, தொல்லியல் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வடக்கு – கிழக்கு தழுவிய போராட்டத்தின் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை போராட்டம் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்திலே தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் கடந்த முதலாம் திகதி ஏழு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் 22 இற்கும் மேற்பட்ட மத, சமூக மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றிருந்தது.

அந்தக் கூட்டத்தில், தமிழ் மக்களின் தொன்மையையும் தேசியத்தையும் சிதைக்கும் வகையில் கலாசார பண்பாட்டு மற்றும் சமூக விழுமியங்களைச் சிதைத்து இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் சைவ ஆலயங்களை நிர்மூலமாக்கியும் அங்கு பௌத்த சின்னங்களை நிறுவியும் அரசால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப்படுகொலையை எதிர்த்துப் போராட்டத்தை வடக்கு – கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நாளில் முன்னெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் இவ்வேளையில் அதனுடைய கடுமையான எதிர் விளைவுகளைக் கவனத்தில்கொண்டு அந்தச் சட்ட வரைவை எதிர்த்தும் அதை நிறைவேறாமல் தடுப்பதற்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களினுடைய பிரதிநிதிகளோடு கலந்துரையாடல் நடத்தி ஒன்றிணைந்த எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாகப் போராட்டம் தொடர்பான ஏற்பாட்டுக் குழுவினர் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி போராட்டம் நடத்துவது தொடர்பில் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.