உக்ரைன்: குடியிருப்பு பகுதியில் ரஷிய ஏவுகணை தாக்கி 8 பேர் உயிரிழப்பு.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதியில், ரஷியா படையெடுத்தது. இந்த போரானது, ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. ரஷியாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு வேண்டிய நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன.
ஆனால், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பிற முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. போரின் விளைவால் பலர் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்து வருகின்றன.
எனினும், குடியிருப்பு மீது தாக்குதல் நடைபெறவில்லை என ரஷியா கூறி வந்தது. இந்த சூழலில், உக்ரைனின் பாக்முத் நகரை கைப்பற்றி விட்டோம் என்றும், ரஷிய கொடியும் நாட்டப்பட்டு விட்டது என சமீபத்தில் அந்நாடு தெரிவித்து இருந்தது.
இந்த சூழலில், அல் ஜசீரா வெளியிட்ட செய்தியில், டோனெட்ஸ்க் பகுதியின் கவர்னர் பாவ்லோ கிரிலென்கோ கூறும்போது, உக்ரைனின் கிழக்கே சுலோவியான்ஸ்க் நகரில் குடியிருப்பு பகுதியில் ரஷியாவின் 7, எஸ்-300 ரக ஏவுகணைகள் தாக்கி உள்ளன.
இந்த ஏவுகணை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 21 பேர் காயமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார். சிலர் சம்பவ பகுதியிலும், சிலர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்து உள்ளனர். இந்த நகரம் பாக்முக் நகரில் இருந்து மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது.
பாக்முத் நகரில் உக்ரைனிய படைகள் ரஷியாவுக்கு எதிராக கடுமையாக போரிட்டு வருகின்றன. ரஷியா போரை தொடங்கியதில் இருந்து சுலோவியான்ஸ்க் நகரில் இருந்து, தங்களை பாதுகாத்து கொள்ள மக்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேறினர்.
பாக்முத் நகரை ரஷியா ஆக்கிரமித்து வரும் சூழலில் இன்னும் பல மாவட்டங்களை கைப்பற்றும் முயற்சியில் இருக்கிறோம் என்று ரஷியா தெரிவித்து உள்ளது.