ஊழல் செய்தவர்களை பா.ஜனதா பகையாளியாக பார்க்கும்: அண்ணாமலை பேட்டி.

திருச்சி விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:-

ஊழல் என்று வந்த பின்னர் நண்பர்கள், அண்ணன், தம்பி என்றெல்லாம் பார்க்க கூடாது. தமிழகத்தில் ஒரு சாதாரண மனிதன் கூட ஊழல் பட்டியலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான். எங்களுக்கு யாரும் பங்காளிகள் கிடையாது, எல்லோருமே பகையாளிகள் தான்.

யார் ஊழல் செய்திருக்கிறார்களோ, அவர்களை பா.ஜனதா பகையாளிகளாக தான் பார்க்கும். தி.மு.க. ஊழல் பட்டியலை நான் வாசித்தபோது, எனக்கும் இந்த சொத்துகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தி.மு.க.வினர் இதுவரை ஒருவர் கூட சொல்லவில்லை. சுமார் 150 நிறுவனங்களை நாங்கள் சொல்லி உள்ளோம். நான் உரிமையாளர் இல்லை என்று யாரும் சொல்லவில்லை.

நான் இது வரை எந்த பணமும் கொள்ளையடிக்கவில்லை. இங்கு ஒவ்வொரு அமைச்சர்களும் கிட்டத்தட்ட 10 உதவியாளர்களை வைத்திருக்கிறார்கள், 100 வேலையாட்களை வைத்துள்ளனர். அவர்களுக்கு சம்பளம் எப்படி வழங்குகிறார்கள்?. என்னுடைய வங்கி கணக்கு விவரங்களை 12 வருடமாக ஓப்பனாக நான் கொடுத்துள்ளேன்.

என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கு சம்பளத்தை எனது நண்பர்கள் அளிக்கிறார்கள். நான் சாப்பிடும் உணவு உள்ளிட்ட ரசீதை கூட என்னால் காட்ட முடியும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் என்பது முழுக்க முழுக்க ஊழலை மையமாக வைத்து தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.