உள்ளகப் பொறிமுறைக்கு எதிரான கருத்துக்கள் பற்றி அலட்டிக்கொள்ள விரும்பவில்லை!
“உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு உள்ளகப் பொறிமுறைக்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆதரவளித்தேயாக வேண்டும். இதை எதிர்க்கும் கருத்துக்கள் தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான சட்டவரைவு மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை – உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைப்பது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் அதற்குப் பொறுப்புக் கூறுவது தொடர்பிலும், அரசினுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவும் அந்த ஆணைக்குழு மிகவும் அவசியம்.
இலங்கை இறைமையுள்ள நாடு. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் இதற்கு ஆதரவளித்தே தீரவேண்டும். அதைவிடுத்து சர்வதேசம்தான் தீர்வைத்தரும் என்று காத்திருப்பவர்கள் குறித்தோ, ஆணைக்குழுவை எதிர்ப்பது தொடர்பிலோ நான் கருத்துக் கூறவும் விரும்பவுமில்லை; அதுபற்றி அலட்டிக்கொள்ளவும் விரும்பவுமில்லை.
நாட்டின் அதியுயர் சபையில் சட்டவரைவைத் தயாரித்து ஒப்படைப்போம். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.”என்றார்.