பாஜக உத்தரவிட்டால் சிபிஐ தன்னை கைது செய்யும் – அரவிந்த் கெஜ்ரிவால்

மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணைக்காக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜ.க உத்தரவிட்டால் சிபிஐ தம்மை கைது செய்யும் என்றார்.

டெல்லியில் 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்னர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார். முன்னதாக வீடியோ வெளியிட்ட கெஜ்ரிவால் பாஜக உத்தரவிட்டால் சிபிஐ தன்னை கைது செய்யும் என்றார். இதனிடையே முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினர் காஷ்மிரி கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டெல்லி போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.