5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி.
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 185 ரன்களை சேர்த்தது. நிலைத்து நின்று ஆடிய வெங்கடேஷ் அய்யர் 51 பந்துகளில் 9 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 104 ரன்கள் எடுத்தார். மும்பை அணி சார்பில் ரித்திக் ஷோக்கீன் 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன், பியூஷ் சாவ்லா, மெரிடித், யான்சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 65 ரன்களை சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 20 ரன்னில் அவுட்டானார். அரை சதமடித்த இஷான் கிஷன் 25 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 58 ரன்களை குவித்தார்.
தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் 43 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 30 ரன்னில் வெளியேறினார். இறுதியில், மும்பை அணி 17.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்து வென்றது. டிம் டேவிட் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.