யாழில் அம்மன் சிலையை அகற்ற நீதிமன்ற உத்தரவு : சிலைக்கு பொலிஸ் பாதுகாப்பு.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் உள்ள நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் சிலை ஒன்றை இனம் தெரியாதோர் நிறுவியதையடுத்து, அதனை அகற்றுவதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றதையடுத்து , பல தரப்பினரும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நாகபூஷணி அம்மன் கோவில் பார்வதி அம்மன் சிலையை வீதிக்கு அருகே வைத்தமை தொடர்பில் கடந்த 15ஆம் திகதி யாழ்.நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த யாழ்.பொலிசார், இந்த சிலையினால் பொது ஒழுங்கு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக யாழ் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அச் சிலையை அங்கு வைத்த எவரும் இதுவரை உரிமைகோரவில்லை.
அதற்கான உரிமையாளர் ஒருவர் இல்லாவிட்டால், சட்டப்பூர்வமற்ற சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.நீதிமன்றத்தால் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, யாழ்.பொலிசார் சிலைக்கு அருகில் சுவரொட்டி ஒன்றை ஒட்டியதுடன், சிலைக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
சிலையை நிறுவிய தரப்பினர் எவராவது இருப்பின் உரிய உத்தரவுடன் யாழ்.நீதிமன்றத்தில் பங்கேற்குமாறும் , இன்று 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அச் சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் அந்தந்த சிலையை அகற்ற வேண்டி வரும் எனவும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சிலை அகற்றுதல் மற்றும் நீதிமன்ற உத்தரவு மற்றும் சிலை நிர்மாணம் தொடர்பாக இன்றும் நாளையும் நல்லூர் ஆலய பிரதமகுரு நல்லை ஆதினம் உட்பட பல இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவாதிக்கவுள்ளனர்.