மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இருமடங்காக உயர்த்தப்படும் – அமைச்சர் கீதா ஜீவன்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இருமடங்காக உயர்த்தப்படும் எனவும், அரசுப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத ஒதுக்கீடு பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்.உயர்கல்வி பயிலும் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தலா 14,000 ரூபாய் மதிப்பீட்டில் நவீன வாசிக்கும் கருவி வழங்கப்படும் எனவும்,மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றும் 1,011 பேரின் மதிப்பூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்படுவதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 700 குழந்தைகள் மையங்களுக்கு எல்இடி தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும் என்றும் 17,312 அரசுப்பள்ளிகளின் சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குழந்தைகளுக்கு ஸ்வட்டர், தொப்பி, கால் உரை வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன், திருச்சி, கோவை மற்றும் சென்னையில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என கூறினார்.