ஹரியானா மாநிலத்தில் அரிசி ஆலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி!
ஹரியானா மாநிலத்தில் அரிசி ஆலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தின் கர்னல் பகுதியில் உள்ள டாரோரி பகுதியில் மூன்று மாடி கட்டிடத்தில் அரசி ஆலை இயங்கி வந்தது.
இந்த அரிசி ஆலையில் பல தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் சுமார் 160 பேர் வழக்கம் போல வேலை பார்த்துவிட்டு இரவு கட்டத்தில் படுத்து உறங்கியுள்ளனர். இன்று அதிகாலையில் திடீரென கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த கோர விபத்தில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அனிஷ் யாதவ் கூறுகையில், முதல்கட்ட விசாரணையில் கட்டத்தில் சில சேதாரங்கள் இருந்ததே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விபத்து விசாரணைக்கு குழு அமைக்கப்படவுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு துறையுடன் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் இணைந்து ஈடுபட்டுள்ளது.