விடைத்தாள்களை மதிப்பிடுவதை தவிர்க்கும் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி!
பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பிணைக் கைதிகளாக வைத்திருக்க அனுமதிக்கப் போவதில்லை எனவும், இந்த வாரம் பரீட்சை தொடர்பான சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கி விடைத்தாள் மதிப்பீட்டிற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுக்களினால் 2023ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உயர்தர விடைத்தாள் சுட்டிகள் தொடர்பில் மாற்று யோசனைகள் மற்றும் தீர்வுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை இந்த வார இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, பரீட்சை தொடர்பான பணிகளை அத்தியாவசிய சேவையாக நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பரீட்சையை அவசர சேவையாகப் பேணுவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த வருடம் விடைத்தாள்களை திருத்துவதில் ஈடுபட்ட குழுவைப் பயன்படுத்தியே இந்த வருடத்திற்கான உயர்தர விடைத்தாள் மதிப்பெண் கொடுப்பதையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அந்த நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாவிட்டால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும், இது தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.