கரூரில் முன்னாள் காதலிக்கு போன் செய்த காதலனின் சகோதாரர் கொலை
நாமக்கல் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் காதல் விவகாரத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் குரு பிரகாஷ். இவர் அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படிப்பு படித்து வருகிறார்.
இவரும் அதே கல்லூரியில் படிக்கும் அய்யர்மலை சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் கல்லூரி மாணவி கீழக் குட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குரு பிரகாஷ் மீண்டும் அந்த கல்லூரி மாணவியுடன் தொடர்பு கொண்டு பேசியபோது கல்லூரி மாணவி, காதலன் ஆட்டோ டிரைவர் அருண்குமாரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அருண்குமார், குருபிரகாஷிடம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து கொண்டு அருண்குமார் நேற்று கல்லூரி மாணவர்கள் செல்லத்துரை, விஜய் ஆகியோரும் மூலம் சமாதானம் பேசுவதற்காக குரு பிரகாஷை வரவழைத்துள்ளார். அப்போது குரு பிரகாஷின் பெரியப்பா மகனான ஐடிஐ மாணவன் விக்னேஷுடன் குரு பிரகாஷ் வந்துள்ளார்.
அய்யர்மலை தெப்பக்குளத்தில் வைத்து குரு பிரகாஷை அருண்குமார், அவரது சகோதரர் சங்கர், கல்லூரி மாணவர்கள் செல்லத்துரை, விஜய், சரவணன் உள்ளிட்ட பலர் தாக்கியுள்ளனர்.
குருபிரகாஷைத் தாக்குவதை தடுக்க வந்த விக்னேஸ்வரனையும் உருட்டு கட்டை மற்றும் கற்களால் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த குருபிரகாஷ் மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ்வரன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக குளித்தலை போலீசார் கீழ குட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார், வீரகுமாரன்பட்டியை சேர்ந்த செல்லதுரை, கண்டியூரை சேர்ந்த விஜய், வை.புதூரைச் சேர்ந்த சரவணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தலைமறைவாக இருந்த சந்தோஷ் குமார் என்ற கல்லூரி மாணவனை குளித்தலை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். இவர்கள் ஐந்து பேரையும் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய பின்பு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.