வடக்கில் முன்பள்ளிகளின் தனி அலகை இல்லாமலாக்க முயற்சி!
வடக்கு மாகாண சபையால் உருவாக்கப்பட்ட ‘வடக்கு மாகாண முன்பள்ளி கல்வி நியதிச் சட்டம்’ வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸால் தன்னிச்சையாக மீறப்பட்டுள்ளதுடன், முன்பள்ளி களை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டிலிருந்து, மத்திய அரசாங்கத்தின் கீழ் கல்வித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்வாங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 650 முன்பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன. இலங்கையிலேயே முன்பள்ளி தொடர்பில் ஓர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஒழுங்கு முறைமை ஏற்படுத்தப்பட்ட முதலாவது மாகாணமாக வடக்கு மாகாணமே உள்ளது. இதனைச் சட்டரீதியாக ஒழுங்குபடுத்தும் வகையிலேயே வடக்கு மாகாண முன்பள்ளி கல்வி நியதிச் சட்டம்’ உருவாக்கப்பட்டது.
வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சராகவிருந்த த.குருகுலராஜாவால் மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்ட வடக்கு மாகாண முன்பள்ளி கல்வி நியதிச்சட்டம் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இதுவரை காலமும் முன்பள்ளி கல்வி அலகு தனியாக இயங்கி வந்தது. இது தற்போது வடக்கு மாகாண அமைச்சின் கீழிருந்து நீக்கப்பட்டுள்ளது.
மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ், மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் இந்த மாதம் 4ஆம் திகதி வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோண் குயின்ரஸால் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
“தங்கள் வலயங்களுக்குட்பட்ட முன்பள்ளி செயற்பாடுகளில் பல்வேறு குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. முன்பள்ளி செயற்பாடுகளில் ஓய்வு பெற்றவர்கள், தனியார்கள், நிறுவனங்களின் செயற்பாடுகள் அனுமதியின்றி நடைபெறுவது தவிர்க்கப்படல்வேண்டும். முன்பள்ளிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பாக மாகாணக் கல்வி திணைக்களத்தின் அனுமதி பெறப்படல்வேண்டும்.
முன்பள்ளி உதவிப் பணிப்பாளர்களை ஆரம்ப உதவி கல்வி பணிப்பாளர்களின் ஆலோசனை பெற்று செயற்படுவதற்கு வெளிப்படுத்துவதுடன் முன்பள்ளி கோட்டமட்ட இணைப்பாளரின் செயற்பாடு தொடர்பாக வாராந்த அறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ் இணைப்பாளர்களின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு இடமளிப்பதை தவிர்த்தல் வேண்டும். முன்பள்ளிகளிலிருந்து விலகும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து கொடுப்பனவுகளை நிறுத்த வேண்டும். முன்பள்ளிகளில் தொடர்ச்சியாக கண்காணிப்புக்கள் மேற்கொள்வதை உறுதி செய்தல் வேண்டும்” – என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனூடாக முன்பள்ளி கல்வி அலகின் சுயாதீனம் பறிக்கப்பட்டு, அது கல்வித் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் வலய ரீதியாக உள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் சுயாதீனமும் நியதிச் சட்டத்துக்கு முரணாக பறிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்கு ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒரு மாதத்துக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் மடு கல்வி வலயத்துக்குரிய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற நிலையில், அங்கு உதவிக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை. வலயக் கல்விப் பணிப்பாளரால் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளருக்குரிய நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு மாகாணகல்வித் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த போதும், மாகாண கல்வித் திணைக்களத்தால் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி ‘இணைப்பாளர்’ பதவியிலேயே ஒருவர் மன்னார் மடு வலயத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் வடக்கு மாகாண சபையால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டத்துக்கு முரணானதாகும்.
இதற்கு மேலதிகமாக முன்பள்ளி கல்விக்கோட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்படவேண்டும். அந்தப் பதவிக்கு இதுவரை காலமும் முன்பள்ளி ஆசிரியர்களே நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதனை மாற்றி ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை நியமிக்குமாறு மாகாணகல்வித் திணைக்களம் வலயங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டமைந்த மாகாணசபையால் உருவாக்கப்பட்ட நியதிச்சட்டத்தை ஆளுநர் உட்பட எவரும் மாற்றியமைக்க முடியாது என்றும், மாகாண சபையால் மாத்திரமே அதில் மாற்றங்களைச் செய்ய முடியும் எனவும் சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நியதிச் சட்டத்தை உருவாக்கி நீதிமன்றில் அது தவறு என்று குறிப்பிடப்பட்டு மீளப்பெறப்பட்டமையையும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.