வடக்கு கல்வி அமைச்சின் செயலரும் பணிப்பாளரும் முன்பள்ளி விவகாரத்தில் முரண்பட்ட பதில்கள்!
வடக்கு மாகாண முன்பள்ளி கல்வி நியதிச் சட்டத்துக்கு முரணாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கிய முன்பள்ளிக் கல்வி அலகு, மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் அவ்வாறானதொரு மாற்றங்கள் நிகழவில்லை என்று மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸூம், அவ்வாறு கல்வித் திணைக்களத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று செயலர் உமா மகேஸ்வரனும் தெரிவித்துள்ளனர்.
“முன்பள்ளி கல்வி அலகில் எந்தவொரு மாற்றங்களும் நிகழவில்லை. வழமைபோல வட மாகாண கல்வி அமைச்சின் கீழே முன்பள்ளிகள் செயற்படும். ஆரம்ப கல்வி பிரிவின் கீழ் முன்பள்ளி கல்வி அலகு உள்வாங்கப்படவில்லை” என்று கல்விப் பணிப்பாளர் ஜோண் குயின்ரஸ் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் உமா மகேஸ்வரன், “வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கிய முன்பள்ளிகளானது தற்போது மாகாண கல்வி திணைக்களத்துக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அனைத்து முன்பள்ளிகளும் தேசிய ரீதியாக ஒரு கட்டமைப்பின் கீழ் வரவுள்ளன. அவை ஆரம்பநிலைப் பாடசாலைகளுடன் தொடர்புபட்டதாக வரவிருக்கின்றன.” – என்றார்.