203 மசூதிகளுக்கு பலத்த பாதுகாப்பு.. புர்கா அணிந்த பெண்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவர்….
முஸ்லிம் மசூதிகளை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கண்டி பிரதேசத்தில் உள்ள 203 முஸ்லிம் மசூதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி மசூதிகள் சூழவுள்ள பகுதிகளில் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ரமழான் தினத்தன்று அக்குறணையில் உள்ள பிரதான முஸ்லிம் மசூதியை குறிவைத்து குண்டு தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்று இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த அநாமதேயத் தகவலின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பர்தா அணியும் பெண்களும் சிறப்புக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அடையாள அட்டையைக் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தும் நோக்கில், அப்பகுதியில் மேலும் விரிவான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார்.