வேங்கைவயல் விவகாரம் : குற்றவாளிகளை நெருங்கும் சிபிசிஐடி போலீசார்!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி நீரை சோதனை செய்வதற்காக பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மூன்று மாத காலமாக சிபிசிஐடி போலீசார் வேங்கை வயல் இறையூர் முத்துக்காடு ஆகிய பகுதியிலுள்ள 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது. விரைவில் அந்த ஆணையம் விசாரணை செய்யும் என்றும் அதற்கு தமிழக அரசு வேண்டிய ஏற்பாடுகளை ஆணையத்திற்கு செய்து கொடுக்கும் என்றும் நேற்று சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.
இதற்கிடையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்த 147 நபர்களில் 119 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். குறிப்பாக 11 பேர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று சிபிசிஐடி போலீசார் சந்தேகத்துள்ளனர். இவர்களுடைய டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சிபிசிஐடி தலைப்பில் புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
குறிப்பாக இந்த வழக்கில் சந்தேகப்படும்படியான உள்ள நபர்களான அதே பகுதியைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை காவல்துறையில் பயிற்சி காவலராக பணியாற்றி வரும் முரளி ராஜா உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ தினத்தன்று அந்த பகுதியில் உள்ள whatsapp குழுவில் இது தொடர்பாக தகவல் பரிமாற்றம் ஆடியோவாக பதிவு செய்தனர். அவர்களின் ஆடியோவை உண்மைதன்மை கண்டறியும் சோதனைக்காக உட்படுத்தி அவர்களுடைய குரல் மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது
இதனை விசாரித்த புதுக்கோட்டை சிறப்பு எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்யா பயிற்சி காவலர் முரளி ராஜா உள்ளிட்ட மூன்று பேர் சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்தில் குரல் பரிசோதனைக்காக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டதோடு இந்த வழக்கில் நெருங்கிய சம்பந்தப்பட்டதாக 11 பேரை முதல் கட்டமாக டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கலந்த மனித கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று நீர் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
விரைவில் நீதிமன்ற உத்தரவிட்டதன் பேரில் முதல் கட்டமாக 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது இதன் பிறகு சோதனை முடிவுகள் வந்த பிறகு இவர்களில் யாருடைய கழிவு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கலந்தது என்ற விவரம் தெரிய வரும். எனவே சிபிசிஐடி தரப்பு குற்றவாளியை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.