‘ புலனாய்வு அமைப்புகள் தெஹிவளை குண்டுதாரியை தற்கொலை செய்துகொள்ள அனுமதித்தனரா?’
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன, இன்னும் நீதி வழங்கப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் (ஏப்ரல் 21), அரசாங்கத்தின் இயலாமை மற்றும் கேள்விக்குரிய விசாரணைப் பகுதிகள் குறித்த அசமந்தப் போக்கை மீண்டும் கணடனையோடு வலியுறுத்தினார்.
“இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கும் சஹாரான் ஹஷிமின் பயங்கரவாதக் குழுக்களுக்கும் இடையில் எவ்வாறான ஒப்பந்தங்கள் சில காலமாக இடம்பெற்றன என்பதைக் கண்டறிய யாராவது ஏதாவது முயற்சி செய்திருக்கிறார்களா என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். ”
தெஹிவளையில் வெடிகுண்டில் தற்கொலை செய்து கொண்ட ஜெமீல் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு நன்றாகவே தெரியும். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அவரை வெடிகுண்டு வெடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதித்தது ஏன் என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். அதேபோல் அவராகவே வெடித்தாரா அல்லது யாராவது ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைத்தார்களா என்ற கேள்வியையும் எழுப்பலாம். இந்த மனிதனின் தற்கொலையில் அவர்களுக்கும் ஜெமீலுக்கும் அவரது குழுவிற்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய தகவல்களை இல்லாமல் செய்வதற்கு புலனாய்வு அமைப்புகள் அனுமதித்துள்ளனரா என்ற சந்தேகமும் எமக்கு உள்ளது என கர்தினால் மேலும் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் பிரதான ஆராதனை இன்று (ஏப்ரல் 21) கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றது.
ஏப்ரல் 21, 2019 அன்று, எட்டு வெடிகுண்டு தாக்குதல்களில் தற்கொலை குண்டுதாரிகள் உட்பட 277 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 407 ஆகும்.