ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் மனுக்கள் ஏற்பு: அதிமுக கடிதம்
ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.
224 தொகுதிகளைக் கொண்ட, கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவுடன் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல், ஓபிஎஸ் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஈபிஎஸ் ஆதரவு பெற்ற அன்பரசனின் மனு ஏற்கப்பட்டது. இந்த தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் ஆதரவுடன் மனு தாக்கல் செய்த குமாரின் மனு அதிமுக வேட்பாளராகவும், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் மனு சுயேச்சையாகவும், ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இரட்டை சிலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. எனவே உண்மையான அதிமுக தாங்கள் தான் என நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டி கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தலைமை கடிதம் எழுதியுள்ளது.
அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதாகவும், வேறு எந்த தொகுதியிலும் அதிமுக போட்டியிடவில்லை எனவும் காந்திநகர் தொகுதியில் ஓ பி எஸ் தரப்பு வேட்பாளர் மனு ஏற்கப்பட்ட நிலையில் அங்கு அதிமுக வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை எனவும் அதிமுக அந்த கடித்ததில் விளக்கமளித்துள்ளது.
ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் தவறான புரிதலால் ஓ.பி.எஸ் தரப்பு வேட்புமனுவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.